இரசாயன ஆயுதக் கூட்டமைப்பைத் தடை செய்வதற்கான அமைப்பின் (OPCW) ஆசியப் பிராந்திய உறுப்பு நாடுகளின் தேசிய அதிகார சபைகளின் 23வது பிராந்தியக் கூட்டம் 2025 ஜூலை 01 முதல் 03 வரை இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்றது. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் இரசாயன ஆயுதக் கூட்டமைப்பை அமுல்படுத்தும் தேசிய அதிகார சபையின் (NACWC) பணிப்பாளர், எயார் வைஸ் மார்ஷல் ஷெஹான் விஜயநாயக்க அவர்கள் இம்முக்கிய பிராந்திய நிகழ்வில் கலந்துகொண்டார். இரசாயன ஆயுதக் கூட்டமைப்பை (CWC) அமுல்படுத்துவதில் தேசிய, உப-பிராந்திய மற்றும் பிராந்திய ரீதியான அனுபவங்களை தேசிய அதிகார சபைகள் கலந்தரையாடுவதற்கு இக்கூட்டம் ஒரு முக்கிய தளத்தை வழங்கியது. பிரதிநிதிகள் தத்தமது நாடுகளில் இரசாயன பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான விடயங்கள், முன்னுரிமைகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சித்திட்டத்தின் போது, இலங்கையின் இரசாயன ஆயுதக் கூட்டமைப்பை அமுல்படுத்தும் தேசிய அதிகார சபையின் (NACWC) பணிப்பாளர், மலேசியப் பிரதிநிதிகளுடன் இணைந்து ஒரு கலந்துரையாடல் குழுவில் பங்கேற்றார். இதில் வழிகாட்டல் கூட்டாண்மை நிகழ்ச்சித்திட்டத்தின் (MPP) வெற்றியை எடுத்துரைத்து அதன் எதிர்கால திசை குறித்து ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடல் இரு நாடுகளுக்கிடையேயான வலுவான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை எடுத்துக்காட்டியது. இக்கலந்துரையாடலின் போது, எதிர்வரும் ஆண்டில் இலங்கையில் உதவி மற்றும் பாதுகாப்பு அடிப்படைப் பாடநெறியை நடத்துவதற்கான இலங்கையின் நோக்கம் எடுத்துரைக்கப்பட்டதுடன், இலங்கையின் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (ITI) இணைந்து இரசாயன ஆயுதக் கூட்டமைப்பின் (CWC) பகுப்பாய்வுத் திறன்களை நிறுவுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளும் முன்னிலைப்படுத்தப்பட்டன. இந்த முயற்சிகள், இரசாயன ஆயுதத் தடை அமைப்பின் (OPCW) ஆதரவுடன் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன.
